தமிழகத்தில் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சார்பில் செப்டம்பர் 30ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்த ஒருநாள் வேலைநிறுத்தம் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பேருந்து கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தனியார் பேருந்து உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தை அறிவித்திருந்தனர். மேலும், அக்டோபர் 2ஆம் தேதி முதல் அரசு பேருந்துகளில் பெண்களுக்கான இலவச பயணத் திட்டம் விரிவுபடுத்தப்படுவதற்கும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
தனியார் பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவச பயணத்தை வழங்கி, அதற்கான இழப்பீட்டை அரசு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில், தமிழக அரசின் வருவாய்த்துறை மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர்கள் தனியார் பேருந்து உரிமையாளர்களை தொடர்புகொண்டு அவர்களின் முக்கிய கோரிக்கைகளை பரிசீலிப்பதாக உறுதியளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து திட்டமிடப்பட்டிருந்த ஒருநாள் வேலைநிறுத்தத்தை ஒத்திவைப்பதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
இதனால் செப்டம்பர் 30ஆம் தேதி தனியார் பேருந்து சேவைகள் வழக்கம்போல் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், தனியார் பேருந்து உரிமையாளர்களின் கோரிக்கைகள் தொடர்பான அடுத்தகட்ட பேச்சுவார்த்தைகள் மீது கவனம் திரும்பியுள்ளது.